பொதுமக்களிடம் மவுசு பெறும் மண்பானைகள்

கோடைகாலம் நெருங்குவதால் பொதுமக்களிடம் மண்பானைகள் மவுசு பெற்றுள்ளன.

Update: 2021-02-20 18:28 GMT
காரைக்குடி,

கோடைகாலம் நெருங்குவதால் பொதுமக்களிடம் மண்பானைகள் மவுசு பெற்றுள்ளன.

வெயில் 

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வழக்கமாக வெயில் காலங்களில் பொதுமக்களை கவரும் விதத்தில் இளநீர், பதநீர், நுங்கு விற்பனை செய்யும் தற்காலிக கடைகள் சாலையோரத்தில் ஆங்காங்கே புற்றீசல் போல முளைக்க தொடங்கும். 
அது போல் சமீபத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அடிக்க தொடங்கி இருப்பதால் சிவகங்கை மாவட்டத்தில் பிரதான சாலையோரங்களில் குளிர்பான கடைகள், இளநீர், பதநீர் கடைகளில் வியாபாரம் களை கட்ட தொடங்கி உள்ளது.

மவுசு அதிகரிப்பு

இந்த நிலையில் பொதுமக்களை கவரும் விதத்தில் மண்பாண்ட தொழிலும் நவீன யுகத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கேன்வாட்டர் மூலம் பொதுமக்கள் அதிகம் பேர் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பொதுமக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு மண்பானையில் குழாய் திறப்பானை வடிவமைத்து இன்றைய கால குழந்தைகளும் விரும்பும் விதத்தில் மண்பாண்ட கலைஞர்கள் வடிவமைத்து உள்ளனர்.
தற்ேபாது கோடை காலம் நெருங்குவதால் இது போன்ற மண்பானைகளுக்கு பொதுமக்களிடைேய மவுசு அதிகரித்து உள்ளது. 
இது குறித்து மண்பானை விற்பனை செய்பவர் கூறியதாவது:-

உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை மண்பாண்ட பொருட்கள் உற்பத்தியில் மானாமதுரை சிறந்து விளங்குகிறது. இங்குள்ள மண்பாண்ட கலைஞர்கள் பல்வேறு விதமான மண்பானைகள், கூஜாக்களை தயாரித்து வருகின்றனர். காரைக்குடியை அடுத்த கோட்டையூர் பகுதியிலும் மண்பாண்டங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
கோடை காலம் நெருங்குவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். அதோடு வருகிற காலங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவதால் பூவோடு எடுத்தல், பொங்கல் வைப்பதற்கும் மண்பாண்ட பொருட்கள் அதிகம் விற்பனையாகும். மண்பானையில் தண்ணீர் பிடித்து வைத்து குடிப்பதால் அது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால் இன்றைய தலைமுறையினர் பலர் தங்கள் வீடுகளில் நவீன காலத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட திறப்பான் உள்ள மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். மண்பானைகளின் அளவை பொறுத்து ரூ.100 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. மண்ணால் செய்யப்பட்ட கூஜாக்கள் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்