சீட்டு பணத்துக்கு மினிவேனை அபகரித்ததால் பெண் தீக்குளிப்பு
சீட்டு பணம் தராததால் தொழிலாளி மினிவேனை அபகரித்ததை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் தீக்குளித்தார். எரிந்து கொண்டிருந்த மேல் சட்டையை கழற்றி வீசியதில் தொழிலாளியும் காயம் அடைந்தார்.
பேரணாம்பட்டு
சீட்டு பணம் தராததால் தொழிலாளி மினிவேனை அபகரித்ததை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் தீக்குளித்தார். எரிந்து கொண்டிருந்த மேல் சட்டையை கழற்றி வீசியதில் தொழிலாளியும் காயம் அடைந்தார்.
சீட்டு பணம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் செக்குமேடு முருகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுமித்ரா (வயது 38). இவரும் இவரது கணவர் சீனிவாசனும் ஏலச்சீட்டு நடத்தியதோடு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர். இவர்களிடம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்திமேடு அபிப் நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (36) என்ற தொழிலாளி சீட்டு பணம் கட்டி வந்தார். ஏலத்தின்போது அப்துல் ரகுமான் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு சீட்டை எடுத்தார்.
இந்த நிலையில் சீனிவாசன் இறந்து விட்டார்். இதனால் அப்துல்ரகுமானுக்கு தர ேவண்டிய சீட்டுப் பணத்தை சுமித்ரா தராமல் அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பஜார் வீதியில் சுமித்ராவிற்கு சொந்தமான மினி வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு சென்ற அப்துல் ரகுமான் தனக்கு சேர வேண்டிய சீட்டு பணத்திற்காக அந்த மினிவேனை அபகரித்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த சுமித்ரா தனது தம்பி திருப்பதியுடன் நேற்று முன் தினம் நள்ளிரவு அப்துல் ரகுமான் வீட்டிற்கு சென்றார். அங்கு மினி வேனை திருப்பி தருமாறு கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம ஏற்பட்டது.
அப்போது சுமித்ரா தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டார். அதனை அவரது தம்பி திருப்பதி (35) தடுக்க முயன்றார். ஆனால் சுமித்ரா எரிந்து கொண்டிருந்த தனது மேல் சட்டையை கழற்றி அப்துல் ரகுமான் மீது வீசினார்.
காயம்
இந்த சம்பவத்தில் சுமித்ரா, அவரது தம்பி சுரேஷ், அப்துல்ரகுமான் ஆகிேயார் தீக்காயம் அடைந்தனர். அங்கு வந்தவர்கள் தீயை அணைத்து 3 பேரையும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்். இந்த நிலையில் சுமித்ராவிடம் வேலூர் சப்- மாஜிஸ்ட்டிரேட் ஜெக்னாதன் நேற்று மரண வாக்குமூலம் பெற்றார்.
இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர் சிங்காரம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.