சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
காரைக்குடி அருகே கல்லூரி மாணவிகளின் சாலை பாதுகாப்பு ஊர்வலம் நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கல்லூரி மற்றும் சாக்கோட்டை போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் வித்யாகிரி கல்லூரி தலைவர் கிருஷ்ணன், தாளாளர் மற்றும் முதல்வர் சுவாமிநாதன், பொருளாளர் முகமது மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு ஊர்வலம் புதுவயல் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ-மாணவியர்கள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிராஜ், சேகர், தர்மராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.