கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை 2 பேர் கைது
பூம்புகார் அருகே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருவெண்காடு:
பூம்புகார் அருகே ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிட்டு மீனவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தூண்டிக்காரன் (வயது 56). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜு (60) என்பவரும் நேற்று முன்தினம் மாலை சமுதாயக்கூடம் அருகே பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்துக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (35) என்பவர், என்னுடைய சித்தப்பாவிடம் ஏன் சண்டை போடுகிறாய் என தூண்டிகாரனை தட்டி கேட்டுள்ளார். இதனால் தூண்டிக்காரனுக்கும், பாக்கியராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மீனவர் கொலை 2 பேர் கைது
இதில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ், தூண்டிக்காரனை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் தூண்டிக்காரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தூண்டிக்காரனை மீட்டு சிகிச்சைக்காக பூம்புகார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தூண்டிக்காரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜு மற்றும் பாக்யராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.