2 குழந்தைகளுடன் டிரைவர் தீக்குளிக்க முயற்சி
கவர்னர் வர இருந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகம் முன் 2 குழந்தைகளுடன் டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால்,
கவர்னர் வர இருந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகம் முன் 2 குழந்தைகளுடன் டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏசுராஜ் (வயது 35). நகராட்சி ஒப்பந்த மினிவேன் டிரைவர். இவருக்கு கடந்த 6 மாதமாக சம்பளமும், மினிவேனுக்கு டீசலுக்கான தொகையும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று காலை ஒப்பந்ததாரரரிடம், ஏசுராஜ் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் காரைக்கால் வலத்தெரு வார்டில் பணியாற்றிய ஏசுராஜை, வேறு இடத்துக்கு மாற்றி ஒப்பந்ததாரர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஏசுராஜ், மினிவேனில் தனது 2 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். அங்கு வேனை நிறுத்திவிட்டு, 2 குழந்தைகள் மீதும் திடீரென டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே ஓடிச் சென்று டீசல் கேனை பிடுங்கியதுடன், 3 பேரையும் மீட்டனர்.
பின்னர் 3 பேரையும் அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, ஏசுராஜ், தனக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. வேனுக்கும் டீசல் வழங்கவில்லை. இதனால், எனது குடும்பம் பசியால் வாடுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி தீர்வு காண வேண்டும் என கோஷமிட்டார்.
இதற்கிடையே புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலெக்டர் அலுவலகத்துக்கு வருவதாக இருந்தது. இதையடுத்து போலீசார் குழந்தைகளுடன் ஏசுராஜை பாதுகாப்பாக அப்புறப் படுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
கவர்னர் வருவதற்கு சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.