தி.மு.க. ஆட்சிக்கு அமைந்ததும் மகளிர் சுயஉதவிக்குழு கடன் ரத்து

தி.மு.க. ஆட்சிக்கு அமைந்ததும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என்று பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.;

Update: 2021-02-20 17:05 GMT
நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்ட காட்சி
பொள்ளாச்சி,

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இதன்படி, நேற்று கோவை புறநகர் தெற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மேடைக்கு வந்த மு.க.ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து கையசைத்தார். பின்னர் மேடையில் இருந்து இறங்கி அரங்கின் அனைத்து பகுதிக்கும் சென்றார். அப்போது அவருடன் பொதுமக்கள் கைகுலுக்கினர். சில பெண்கள், குழந்தைகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் அவரிடம் மனுக்களை அளித்தனர். அவற்றை மு.க.ஸ்டாலின் வாங்கி கொண்டார்.

பின்னர் அவர் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் இருந்த மனுக்களை சிலவற்றை எடுத்து, அதை எழுதியவர்களை அழைத்து பேசினார். இதை தொடர்ந்து பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் எழுந்து தங்கள் குறைகளை எடுத்து கூறினார்கள். பின்னர் மனுக்கள் உள்ள பெட்டியை மு.க.ஸ்டாலின் பூட்டி சீல் வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக மக்களுக்காக நான் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறேன். மக்களின் கோரிக்கைகளை 100 நாட்களில் தீர்த்து வைப்பேன் என்பது தான் நான் அளித்து இருக்கும் வாக்குறுதி. ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் நான் காப்பாற்றுவேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது, இது பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சியே சாட்சி என்று கூறினேன். அது இப்போது நிரூபணம் ஆகி இருக்கிறது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்திற்கும் அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளும்கட்சி கூறியது. 

நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினாா். பொள்ளாச்சி ஜெயராமன் அவதூறு வழக்கு போட்டார். ஆனால் தற்போது பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. கைது செய்த 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, இத்தகைய கொடூரக்காரர்கள் தப்பி விட கூடாது என்பதற்காக தான் தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆரம்பத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நானும் அப்போது அறிக்கை விட்டேன்.

இந்த விவகாரத்தில் உள்ள தடயங்களை அழிப்பதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு சதி வேலைகளில் ஈடுபட்டது. தடயங்களை அழித்து, சாட்சிகளை பயமுறுத்தும் வகையில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதலில் நடவடிக்கை எடுக்காத போலீசார் பின்னர் பிரச்சினை பெரிதாகி கொண்டு வருவதை தெரிந்ததும் 3 பேரை கைது செய்து வழக்கை முடிக்க பார்த்தனர்.

 நான் அறிக்கை வெளியிட்ட பிறகே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை கைது செய்தது. அந்த அறிக்கை நான் விடாமல் இருந்து இருந்தால் பொள்ளாச்சி கொடூரம் அப்போதே மூடப்பட்டு இருக்கும்.

இதை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க.வினருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று கூறி இருக்கிறார். 

இதோ இன்று சி.பி.ஐ. அ.தி.மு.க.வினரை தானே கைது செய்து இருக்கிறது. இதுதான் பெண்களை பாதுகாக்கும் அரசாங்கமா?. சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், இதுதொடர்பாக ஆவணங்களை கொடுக்காமல் இழுத்தடித்ததும் அ.தி.மு.க. அரசு தான்.

இதோ இந்த வாரம் ஒரு செய்தி வந்து உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.யிடம் ஒரு கார் பிடிப்பட்டு உள்ளது. அந்த காரில் தான் பாலியல் குற்றவாளிகள் சுற்றி வந்து உள்ளனர். இளம்பெண்களை கடத்தி சென்று இருக்கிறார்கள். 

அந்த கார் பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு சொந்தமானது. இதை நான் பேசுவதால் தைரியம் இருந்தால் இப்போதே என் மீது வழக்கு போட வேண்டும். அந்த வழக்கை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். நான் வாய்க்கு வந்ததை பேசவில்லை. கலைஞருடைய மகன் ஆதாரத்துடன் தான் பேசுவேன்.

தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சிக்கி கொண்டு உள்ளனர். அதிகாரம் இருப்பதால் சிலர் தப்பித்து உள்ளனர். 

அவர்கள் மீது சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை தாமதமானால் இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், உறுதியாக சொல்கிறேன். சட்டத்தின் பிடியில் இருந்தும், இந்த ஸ்டாலின் பிடியில் இருந்தும் அவர்களால் தப்ப முடியாது.

அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு கொடுத்தது கஷ்டமும், கண்ணீரும் தான். ஆனால் பெண்களை மதிக்கும் ஆட்சி என்று பேசிக் மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள். அவதூறுகளையும், பொய்களை கூறி மக்களை திசை திருப்ப நினைக்காதீர்கள். அந்த காலம் முடிந்து விட்டது. மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.

இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வந்து இருக்கிறார்கள். இது ஆட்சிக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடு. இந்த கோபம் அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி ஏறியும். அடுத்து அமைய உள்ள தி.மு.க. ஆட்சியில் பெண்கள்,  குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த ஏராளமான திட்டங்கள் அமல்படுதத்தப்படும்.

ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் குறிப்பாக பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் 5 பவுன் வரை ரத்து செய்வோம் என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். இன்று ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் வாங்கிய கடனை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த ஆட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முழுமையாக செயல்படவில்லை. அதற்கு தேவையான கடனை வழங்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் மகளிர்சுயஉதவிக்குழுக்கள் சீரமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் அவர்களுக்கு பெறப்பட்ட கடன் ரத்து செய்யப்படும்.

இந்த அறிவிப்பை இப்போது எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு வேளை நாளைக்கு இதை அவர் தள்ளுபடி செய்தாலும் செய்வார். அவர் நான் என்ன சொல்கிறேன் என்பதை என்று கவனித்து, அதை வரிசையாக செய்து கொண்டு வருகிறார். மக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க கூடிய ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளி டேபிள் டென்னீஸ் வீரர் சரவணக்குமார், 1330 திறக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்த மாணவர் ராகுல்ராம், தினமும் 500 பேருக்கு உணவு அளித்து வரும் பொள்ளாச்சியை சேர்ந்த சுகுமார் உள்பட பலருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

மேலும் செய்திகள்