பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி ஆற்றில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்

பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி ஆற்றில் பச்சை நிறமாக தண்ணீர் மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-02-20 15:59 GMT
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 72 அடி ஆகும். தற்போது இந்த அணையில் 63 அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து விவசாயத்திற்காக வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணை தண்ணீர் மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் தாலுகாக்களை சேர்ந்த 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி பேரூராட்சிகளுக்கும், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, அய்யன்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி        களுக்கும் மருதாநதி அணை குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்தநிலையில் மருதாநதி அணையில் இருந்து ஆற்றுக்கு திறந்து விடக்கூடிய தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பச்சை நிறமாக தண்ணீர் மாறியதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. இதனை பயன்படுத்துகிற பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அய்யம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து தண்ணீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்