பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டி, திருச்செந்தூர், செய்துங்கநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-20 15:56 GMT
கோவில்பட்டி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டி, திருச்செந்தூர், செய்துங்கநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டம் 

கோவில்பட்டி மணியாச்சி சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, காலி சிலிண்டர், இரு சக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம் நடத்தினர். 

மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மல்லிகா, இனாம் மணியாச்சி கிளை செயலாளர் அழகுசுப்பு, அத்தைகொண்டான் கிளை செயலாளர் விஜயராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணேசன், ராமசுப்பு, முத்துசாமி, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, மணி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

ஸ்ரீவைகுண்டம் 

இதேபோல் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கியாஸ் சிலிண்டருக்கு சூடம், பத்தி, சாம்பிராணி காட்டப்பட்டு கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. 

விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணன், விட்டிலாபுரம் கிளை செயலாளர் வண்டிமலையான், கொங்கராயகுறிச்சி கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் 

இதேபோல் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கியாஸ் சிலிண்டர், மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. 

மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டி, தமிழ்செல்வன், கல்யாணசுந்தரம், கணேசன், சந்திரசேகர், கிளை செயலாளர்கள் அன்பழகன், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்