11 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
கோவைக்கு வருகிற 25ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி 11 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்;
கோவை,
கோவையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி 25 ந் தேதி பிற்பகல் 3 மணியளவில் தனி விமானம் மூலம் புதுச்சேரியிலிருந்து கோவை வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் கொடிசியா அரங்கு செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்
அதன்பின்னர் கார் மூலம் கொடிசியா அரங்கு அருகில் உள்ள மைதானத்தில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் கார் மூலம் விமான நிலையம் செல்கிறார்.
அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் 2 நிகழ்ச்சிகளும் பீளமேடு கொடிசியா அருகில் நடப்பதால் அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த இடங்களில் தற்போது முதல் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஒரு உதவி கமிஷனர் தலைமையில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட ஒன்றிரண்டு நாட்களில் தேசிய பாதுகாப்பு படையினர் கோவை வர உள்ளனர்.
மேலும் கோவைக்கு வரும் முக்கிய சாலைகளில் உள்ள 11 சோதனைசாவடிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு அரண் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.