கோதண்டராமர் கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நிலை
தனுஷ்கோடி செல்லும் அரசு பஸ்கள் கோதண்டராமர் கோவில் செல்லும் சுற்றுலா பயணிகளை இடையில் இறக்கிவிடுவதால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுவருகின்றனர்.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி செல்லும் அரசு பஸ்கள் கோதண்டராமர் கோவில் செல்லும் சுற்றுலா பயணிகளை இடையில் இறக்கிவிடுவதால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுவருகின்றனர்.
கோதண்டராமர் கோவில்
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ளது ராமநாதசாமி கோவிலிலோடு சேர்ந்த கோதண்டராமர் கோவில்.
இலங்கை மன்னராக விபீஷ்ணரை ராமபிரான் பட்டா பிஷேகம் செய்து வைத்ததன் நினைவாக ராமர், லட்சுமணர், சீதை, விபீஷ்ணர் ஆகியோர் அடங்கிய கருங்கற்களால் ஆன சிலைகளும் இடம்பெற்றுள்ளன. கடலின் நடுவே அமைந் துள்ள இந்த கோதண்ட ராமர் கோவிலுக்கு தனுஷ்கோடிக்கு தினமும் வந்து செல்லும் அனைத்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்வதுடன் கோவிலின் மேல்பகுதி பிரகாரத்தில் நின்று கடல் மற்றும் கடற்கரையின் அழகை பார்த்து ரசித்து திரும்பி செல்கின்றனர்.
அவதி
இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்கள் கோதண்டராமர் கோவில் வரையிலும் செல்லாமல் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளை இடையில் இறக்கிவிட்டு வருவதால் தினமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கோதண்ட ராமர் கோவிலுக்கு நடந்தே செல்லும் அவலநிலை இருந்துவருகிறது.
கடந்த சில மாதங்களாக கோதண்டராமர் கோவில் வாசல் வரையிலும் அரசு பஸ்கள் செல்லாமல் பயணிகள் மற்றும் மீனவர்களை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் ஓட்டுனர்கள் இடையிலேயே இறக்கிவிட்டு செல்கின்றனர்.
கோரிக்கை
எனவே இதுகுறித்து போக்குவரத்து கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகள் தனுஷ்கோடிக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் கோதண்டராமர் கோவில் வாசல் வரையிலும் சென்று பயணிகளை ஏற்றி இறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.