மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லாத ஆட்சி அமைய வேண்டும் ஈரோட்டில் எச்.ராஜா பேட்டி
தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் வந்து சேர மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று ஈரோட்டில் எச்.ராஜா கூறினார்.
தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் வந்து சேர மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று ஈரோட்டில் எச்.ராஜா கூறினார்.
ஆலோசனை கூட்டம்
பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோட்டில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் நாளை (அதாவது இன்று) சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. இளைஞர் அணி மாநாட்டிலும், வருகிற 28-ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். இதேபோல் கோவையில் வருகிற 25-ந்தேதி நடக்கும் பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
பிச்சைக்காரர்களாக...
தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு, நல திட்டங்கள் வந்துசேர வேண்டும் என்றால் மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லாத, முதிர்ச்சியான அரசியல் போக்கு கொண்ட ஆட்சி இருக்க வேண்டும்.
இந்த முதிர்ச்சி, அரசியல் போக்கு இல்லாத தி.மு.க. நிலைப்பாடு கோ பேக் மோடியின் போதே தெரிந்தது. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பிச்சைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் பாலிசி. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் முழுமையான ஆதரவு தரவேண்டும்.
பெட்ரோல் -கியாஸ்
காங்கிரஸ் ஆட்சியின்போது 10 ஆண்டுகளில் பெட்ரோல் விலை ரூ.39 வரை உயர்ந்துள்ளது. ஆனால் மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.19 மட்டுமே உயர்ந்துள்ளது. இது பணவீக்க அளவில் சராசரியாக ஏற்க கூடியதாகவே உள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்ததைவிட தற்போது கியாஸ் விலை குறைவாகத்தான் இருக்கிறது. மேலும் உணவு பொருட்களின் விலையும் மோடி அரசில் வெகுவாக குறைந்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி போன்றவற்றிற்கு தி.மு.க. அரசு கையெழுத்து போட்டுவிட்டு தற்போது பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இவ்வாறு எச்.ராஜா பேசினார்.
அப்போது அவருடன் பா.ஜ.க. ஈரோடு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர் குணசேகரன், பொருளாளர் தீபக்ராஜா உள்பட பலர் இருந்தனர்.