சின்னத்துறை கடற்கரையில் ராட்சத ஆமை கரை ஒதுங்கியது
சின்னத்துறை கடற்கரையில் ராட்சத ஆமை கரை ஒதுங்கியது.பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது.;
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் கடல் பகுதியில் நேற்று காலை சுமார் 200 கிலோ எடையுள்ள ராட்சத ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய ஆமை நீண்ட தூரம் மணல் பகுதிக்கு வந்ததால் திரும்ப கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்தது. இதனையடுத்து ராட்சத ஆமை கரை ஒதுங்கிய தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆமையை பார்க்க அங்கு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நித்திரவிளை போலீஸ் நிலைய தனிப்படை ஏட்டு ஜோஸ் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உதவியுடன் ஆமையை கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து பலமணி நேர போராட்டத்திற்கு பின் ஆமை பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டது.
ஆமைகள் பொதுவாக கரை பகுதிகளில் தான் முட்டை இடுவது வழக்கம். அதற்காக தான் இந்த ஆமை கரை ஒதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது என அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.