போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கடலூர் நகரம்
கடலூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கடலூர்,
மாவட்டத்தின் தலைநகரான கடலூர் நகரில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஏராளமான பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளன. இதனால் கடலூரை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைக்காக தினசரி கடலூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.
அதேபோல், கடலூரில் இருந்து புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, திருச்சி, சேலம், திருப்பதி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், விழுப்புரம் உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசல்
இதனால் கடலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ், வேன், ஆட்டோக்கள் மற்றும் சைக்கிளில் நகருக்குள் வருகின்றனர். காலை 8 மணியில் இருந்து 10.30 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரையும் கடலூர் நகரில் பாரதி ரோடு, வண்டிப்பாளையம் ரோடு, திருவந்திபுரம் ரோடு, லாரன்ஸ் ரோடு, முதுநகர் செல்லும் இம்பீரியல் ரோடு, நெல்லிக்குப்பம் மற்றும் மஞ்சக்குப்பம் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போகிறது.
அந்த சமயங்களில் மேற்கண்ட சாலையை கடக்க குறைந்தபட்சம் ½ மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதனால் மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட பொதுமக்கள் உடனடியாக செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகளும், அலுவலகத்திற்கு செல்வோரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அவதிப்படும் மக்கள்
அதே போல், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நகை கடைகள், வணிக வளாகங்கள் அதிகளவில் உள்ளதால், இங்கு வருவோர் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், லாரன்ஸ் ரோடு, வண்டிப்பாளையம் ரோடு, தேரடி தெரு, சுப்புராய செட்டித் தெருக்களில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய போலீசார் முறையாக பணியில் ஈடுபடுவதில்லை என கூறப்படுகிறது. எனவே நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் போலீசாரை நியமித்து வாகனங்களை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவும், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் நகரில் சுமார் 25 போக்குவரத்து காவலர்கள் பணிபுரிகின்றனர். இதில் 5 பேர் சுழற்சி முறையில் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். 4 பேர் நகரில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்காக பேரி கார்டுகளை தூக்கி செல்லும் பணியில் ஈடுபடுகின்றனர். சுமார் 10 பேர் அரசியல் கட்சி தலைவர்களுக்காக பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். 6 பேர் மட்டுமே சுழற்சி முறையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்.
அதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆட்கள் பற்றாக்குறையால் மற்ற நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.