3-வது நாளாக வேலைநிறுத்தம்:வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கோரிக்கைகள்
வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். துணை தாசில்தார்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணியினை வரன்செய்து ஆணையிட மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 17-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சியில் ஆர்ப்பாட்டம்
அதன்படி, திருச்சி மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள 360 அலுவலர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கலைச்செழியன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.