திருச்சியில் கோடை காலம் தொடங்கும் முன்பே சூடுபிடிக்கும் தர்பூசணி விற்பனை
கோடை காலம் தொடங்கும் முன்பே திருச்சியில் தர்பூசணி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
திருச்சி,
குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கப் போகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரங்கு காரணமாக அனைவரும் கோடை காலம் முழுவதும் வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். இந்த ஆண்டு அப்படி தப்பிக்க முடியாது. தற்போது காலையிலேயே வெயில் சுள்ளென்று அடிக்கத் தொடங்கிவிட்டது.
சாலையில் நடமாட முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கப்போகும் கத்திரி வெயிலை நினைத்தால் இப்போதே கலக்கமாக உள்ளது. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அதிக நீர்ச்சத்துள்ள தர்பூசணி பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கோடைகால சீசன் தொடங்கும் போது தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது முதலே திருச்சியில் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இது பற்றி வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாகவும், அதிக மழை பொழிவு காரணமாகவும் தர்பூசணி பழங்களின் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தர்பூசணி பழங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரத்து குறைந்துள்ளது. திண்டிவனம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு பகுதியில் இருந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள தர்பூசணி பழங்களை சீசன் தொடங்கும் முன்பே வியாபாரிகள் வாங்கிவந்து விற்பனைக்காக சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். ஒரு கிலோ தர்பூசணி ரூ.18 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.