கோடை கால நெல் சாகுபடி தொடக்கம்
வத்திராயிருப்பு பகுதியில் கோடை கால நெல் சாகுபடி தொடங்கி உள்ளது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் கோடை கால நெல் சாகுபடி தொடங்கி உள்ளது.
கன மழை
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கன்சாபுரம், கூமாப்பட்டி, இலந்தைகுளம், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, சுந்தரபாண்டியம், ஆயர்தர்மம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி பிரதானமாக நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்த கனமழையால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளுக்கும், நீர் நிலைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து வந்தது.
நீர் மட்டம் உயர்வு
இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வத்திராயிருப்பு பகுதியில் உள்ள 40 கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதில் 30-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் அதன் முழு கொள்ளளவை எட்டியும், பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் 90 சதவீதம் வரை நீர் நிரம்பியும் உள்ளது. வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயிகள் தற்போது முதல்போக நெல் அறுவடை முடித்து இருந்தனர்.
நெல் சாகுபடி
இந்தநிலையில் தற்போது கோடை கால நெல் சாகுபடி தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது முதல் போக நெல் அறுவடையை முடித்து விட்டு கோடை கால பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோடை கால நெல் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தற்போது நெல் நாற்றங்கால் பாவி டிராக்டர் மூலம் உழவுத் தொழிலை மேற்கொண்டு, நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கண்மாய்களில் நீர் உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை இன்றி கோடை கால பருவ நெல் அறுவடையை தாங்கள் சிறப்பாக முடித்து அதிக லாபம் பெற முடியும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர் என்று கூறினர்.