அல்ட்ராடெக் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்ற லாரிகள் சிறைபிடிப்பு
விபத்தில் தொழிலாளி இறந்ததை தொடர்ந்து, அல்ட்ராடெக் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்ற லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி:
தொழிலாளி சாவு
அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்த பின்னர், மோட்டார் சைக்கிளில் கார்த்திக் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ரெட்டிபாளையம்- நாயக்கர்பாளையம் வளைவில் திரும்பியபோது சாலை ஓரத்தில் உள்ள பனைமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரிகள் சிறைபிடிப்பு
இந்நிலையில் ரெட்டிப்பாளையம்-நாயக்கர்பாளையம் சாலையில் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, எதிரே அதிவேகமாக லாரி சென்றதால் தான், மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கார்த்திக் இறந்தார் என்று கூறி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று, அல்ட்ராடெக் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு சென்ற டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கார்த்திக்கின் மனைவி பாக்கியலட்சுமி கதறி அழுதபடி இருந்தார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அல்ட்ராடெக் சிமெண்டு ஆலை நிர்வாகத்திடம் கூறி, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.