விதிமீறல் கண்டறியப்பட்ட 2 கடைகளுக்கு அபராதம்
விதிமீறல் கண்டறியப்பட்ட 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் நடராஜன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சசிகுமார், ஜஸ்டின் அமல்ராஜ், பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் செயல்படும் டீக்கடைகளில் கலப்படம் மற்றும் தரம் குறைவான தேயிலைத்தூள் பயன்படுத்தப்படுகிறதா?, ஓட்டல் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? என்று நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான குளிர்பானம் 12 லிட்டர், உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் சுமார் 4 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதில் தரம் குறைவான உணவு இருந்த ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறாமல் செயல்படும் கடைகள் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும், இது போன்ற ஆய்வு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.