மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை கூட்டம் தள்ளிவைப்பு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-19 19:39 GMT
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். 

ஆட்சிப்பேரவை கூட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 43-வது ஆட்சிப்பேரவை கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கத்தில் நடந்தது. துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கி பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:- 
கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை இந்த பல்கலைக்கழகம் செய்து வருகிறது. கல்வி, கலை, பண்பாட்டுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் வகையில் பாடுபட்டு வருகிறது. பன்னாட்டு தரம் வாய்ந்த மென்பொருள் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு புதிய தொலைதொடர்பு கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்தில் ரூ.9.1 கோடி மதிப்பீட்டில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.

2 புதிய பாடங்கள் 

உயர்கல்வித்துறையில் ஏராளமான சவால்கள் இப்போது உள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுக்கு ஏற்ற பாடத்திட்ட முறைகள் இல்லாததாலும், சமூக பொருளாதார சூழலுக்கும், கல்வி முறைகளுக்கான இடைவெளியும் பெரும் சிக்கல்களை உருவாக்குகின்றன. அதனை நீக்கும் வகையில் இந்த பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. 

தற்போது மேலும் 2 புதிய பாடங்கள் கற்பிக்க பல்கலைக்கழக நிதிநல்கை குழு அனுமதி அளித்து உள்ளது. இளநிலை தொழில் கல்வி, உணவு பதப்படுத்துதல் பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நுட்பங்கள் ஆகிய தலைப்புகளில் 3 ஆண்டு பாடத்திட்டத்துடன் கற்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 

தர்ணா போராட்டம்

இந்த கூட்டத்துடன் சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வழக்குகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் நாகராஜன் தலைமையில் அங்கேயே தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள், தேர்தல் நிறுத்தப்பட்ட தகவலை முறையாக தெரிவிக்கவில்லை எனவும், நீதிமன்ற வழக்குகள் இருந்தாலும் ஒத்திவைத்து அடுத்ததாக தேர்தல் நடைபெறும் தேதியை உடனடியாக இந்த கூட்டத்தில் துணைவேந்தர் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதற்கு துணைவேந்தர் விளக்கம் அளித்த போதிலும், அதை உறுப்பினர்கள் ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உணவு இடைவேளைக்கு பின்னர் கூட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

தள்ளிவைப்பு

ஆனாலும் போராட்டம் கைவிடப்படாத நிலையில், தேதி குறிப்பிடாமல் ஆட்சிப்பேரவை கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக துணைவேந்தர் பிச்சுமணி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணைவேந்தர் அலுவலகம் முன்பு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்