மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் திட்டம் தயார்

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-02-19 19:15 GMT
நாகர்கோவில்:
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டம் 
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர்கள் விர்ஜில் கிராஸ் (நாகர்கோவில்), அஜித் ஸ்டாலின் (குளச்சல்) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டமானது காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஆரோக்கியபுரம் முதல் பெரியகாடு வரையுள்ள மீனவர்களுக்கும், 11.30 மணி முதல் 1.30 மணி வரை ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்களுக்கும் நடந்தது. கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்பிறகு கூட்டத்தில் மீனவர்களும், மீனவ பிரதிநிதிகளும் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
மானிய மண்எண்ணெய் 
நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் வழங்க கணக்கெடுக்கும் பணி 23-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் உள்ளூரில் மீன்பிடி சீசன் குறைவாக உள்ளதால் பெரும்பாலான நாட்டுப்படகுகள் வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளன. எனவே இந்த ஆய்வை மீன்பிடி தடைக்கால சமயத்தில் (ஜூன், ஜூலை) நடத்த வேண்டும். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மேற்கு பகுதியில் வள்ளங்கள் நிறுத்த இடவசதி செய்து தரவேண்டும். சின்னமுட்டம் துறைமுகத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் உள்ள சுனாமி குடியிருப்புக்கு செல்ல முறையான பாதை வசதியில்லை. எனவே பாதை வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்குதுறை பீச் சாலை மிகவும் பழுதாகி துண்டிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். அதற்குள் பள்ளம் மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைப்பதுடன் தூண்டில் வளைவு நீட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மற்றும் சின்னமுட்டத்தை இணைக்கும் வகையில் கடற்கரை வழியாக சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அறிவிக்கப்படும் அரசு வேலைவாய்ப்புகளில் கடலில் உயிரிழந்த மீனவர்களின் மனைவி அல்லது பிள்ளைகளுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் பதில் 
இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசுகையில், ‘‘சின்னமுட்டம் துறைமுகத்தை தூர்வாருவதற்கு ரூ.3 கோடியே 20 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் மணல் அள்ளும் எந்திரம் தேங்காப்பட்டணத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு விட்டது. எனவே விரைவில் தூர்வாரும் பணி தொடங்கப்படும். சின்னமுட்டம் துறைமுகத்தின் மேற்கு பகுதியில் வள்ளங்கள் நிறுத்த பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
ஏன் எனில் கடல் பகுதியில் கற்களும் கிடக்கின்றன. அதை அப்புறப்படுத்தினால் மட்டுமே வள்ளங்கள் நிறுத்த முடியும். அதை அப்புறப்படுத்த திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி பகுதியில் கட்டி கொடுக்கப்பட்ட சுனாமி குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டு வரி ரசீதுடன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தால் மின் இணைப்பு வழங்கப்படும். சங்குதுறை பீச் சாலையை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவ கிராமங்கள்
கன்னியாகுமரியில் இருந்து சின்னமுட்டத்துக்கு கடற்கரை சாலை ஏற்படுத்துவதற்கு கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 47 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது’’ என்றனர்.
கூட்டத்தில் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி, மீனவ சங்க பிரதிநிதி அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்