ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறிய குடும்பம்

உறவினர்கள் மிரட்டுவதாக கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒரு குடும்பம் குடியேறியது.

Update: 2021-02-19 18:55 GMT
கீரமங்கலம், பிப்.20-
உறவினர்கள் மிரட்டுவதாக கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒரு குடும்பம் குடியேறியது.
 மிரட்டுவதாக புகார்
கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி முள்ளிப்புஞ்சை பகுதியை சேர்ந்தவர் தேவராஜன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன் ராஜபாலன்.
இந்த நிலையில் தேவராஜன் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து தாயும், மகனும் கணவருக்காக குடும்பத்தினர் ஒதுக்கி கொடுத்த நிலத்தில் வீடுகட்டி வசித்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக அந்த வீட்டை காலிசெய்துவிட்டு வெளியேறுமாறு, அவர்களது உறவினர்கள் மிரட்டியுள்ளனர்.
ஊராட்சிமன்ற அலுவலகத்தில் குடியேறினர்
இது குறித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வந்து மிரட்டினர். இதனால் அவர்கள் அருகில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கலைச்செல்வியும், அவரது மகன் ராஜபாலனும் தங்கள் வீட்டில் நின்ற ஆடுகளையும், வீட்டில் இருந்த பொருட்களையும் ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சேந்தன்குடி ஊராட்சிமன்ற வளாகத்தில் குடியேறினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் செல்வநாயகம், உள்ளூர் பிரமுகர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததால் மதியத்திற்கு பிறகு ஆடுகள் மற்றும் வீட்டில் இருந்து கொண்டு வந்த பொருட்களை மீண்டும் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
பரபரப்பு
 இது குறித்து அவர்கள் கூறும்போது, உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் கீரமங்கலம் போலீசார் கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை கைவிடுகிறோம். எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் தீர்வு கிடைக்கும் வரை மீண்டும் ஊராட்சி மன்ற வளாகத்தில் குடியேறுவோம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்