பணியாளர் கவனத்தை திசை திருப்பி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை திருடிய கும்பல்
பணியாளர் கவனத்தை திசை திருப்பி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை திருடிய கும்பலில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
கொள்முதல் நிலையம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. தற்போது சம்பா அறுவடை தொடங்கி உள்ளதால் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக, இந்த நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல்மூட்டைகள் தரம்பார்க்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் கொள்முதல் நிலையத்தில் கணக்கர் பாலன் மட்டும் இருந்தார். காவலாளி மற்றும் உதவியாளர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றிருந்தனர். அப்போது கொள்முதல் நிலையத்திற்கு உள்ளே வந்த 8 பேர் கொண்ட கும்பல், அவர்கள் கொண்டு வந்த நெல்மூட்டையை எடுத்துக்கொண்டு உடனடியாக பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். மேலும், கிராமத்தில் ஏற்பட்ட தகராறில் அடிபட்டுள்ளதற்கு சிகிச்சை பெற பணம் வேண்டும் என்பதால் நெல்மூட்டையை விற்கிறோம், என்று கூறியுள்ளனர்.
நெல் மூட்டைகளை...
அவர்களிடம், கணக்கர் பாலன் தன்னிடம் பணம் இல்லை என்றும், சுமை தூக்கும் ெதாழிலாளியிடம் பணம் பெற்றுத்தருவதாகவும் கூறி, சுமை தூக்கும் தொழிலாளியான சிவாவிற்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சிவா, நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து ஒரு கும்பல் நெல் மூட்டைகளை தூக்கிக்கொண்டு, அருகே உள்ள கரும்பு வயலுக்குள் செல்வதை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார்.
மேலும் நெல் கொள்முதல் நிலைய கதவும் சாத்தப்பட்டுள்ளதை கண்ட அவர், உடனடியாக மற்ற சுமை தூக்கும் தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு கொள்முதல் நிலையத்தின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார்.
போலீசார் விசாரணை
கூட்டமாக அவர்கள் உள்ளே வருவதை கண்டு, கரும்பு வயலுக்கு அருகில் நின்ற 4 பேரும் தப்பி ஓடினர். உடனடியாக சுதாரித்து கொண்ட தொழிலாளர்கள், நெல்கொள்முதல் நிலையத்திற்கு உள்ளே நின்ற 4 பேரை பிடித்து விசாரித்ததோடு, அவர்கள் கொண்டு வந்த நெல்மூட்டையை பரிசோதித்தனர். அந்த மூட்டையில் நெற்பதர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அவர்கள் நெல் கொள்முதல் நிலையத்தை சுற்றி பார்வையிட்டபோது, கொள்முதல் நிலைய கம்பி வேலிக்கு அருகே ஒரு நெல் மூட்டையும், கரும்பு வயலுக்குள் அடுத்தடுத்து 5 நெல் மூட்டைகளும் என 6 நெல் மூட்டைகள் கிடந்தன. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கொள்முதல் நிலைய அதிகாரி தங்கையன், நெல்மூட்டைகளை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டார். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு திருமானூர் போலீசார் வந்தனர். பிடிபட்ட 4 பேரையும், போலீசாரிடம் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர்.
4 பேர் கைது
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கரைவெட்டி பரதூர் கிராமத்தை சேர்ந்த சரவணன், செல்வராஜ், கர்ணன் மற்றும் அயன் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. மேலும் ஆள் இல்லாத சமயத்தில் நெல் கொள்முதல் நிலையத்திற்குள் புகுந்து ஒரு மூட்டை நெல்லை விற்பதுபோல் நடித்து, பணியாளரின் கவனத்தை திசை திருப்பி, அங்கு வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகளை திருடிச்சென்று கரும்பு வயலில் பதுக்கி வைத்து, பின்னர் எடுத்துச்செல்லலாம் என்ற திட்டத்தில் வந்ததும், தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேர் குறித்து விசாரணை நடத்தி, அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.