விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா
விழுப்புரம்,
விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி மகோற்சவம் நடைபெற்று வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டும் ரதசப்தமி மகோற்சவ விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 10.30 மணிக்கு சேஷ வாகனத்திலும் பகல் 12.30 மணிக்கு கருட வாகனத்திலும், மாலை 4 மணிக்கு இந்திர விமானத்திலும், 5.30 மணிக்கு கற்பக விருட்ஷத்திலும், இரவு 7 மணிக்கு சந்திரபிரபையிலும் வைகுண்டவாச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்.
அதன் பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.