கடலூர் ரவுடி வீரா கொலை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் 3 பேர் சரண்

கடலூர் ரவுடி வீரா கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 3 பேர் சரண் அடைந்தனர்.;

Update: 2021-02-19 17:52 GMT
விழுப்புரம், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்தவர் கனகராஜ் மகன் வீரா என்கிற வீரங்கன் (வயது 35). பிரபல ரவுடியான இவரை கடந்த 16-ந் தேதி இரவு 10 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.

பின்னர் அவரது தலையை மட்டும் துண்டித்து குப்பங்குளத்தில் உள்ள சேகர் என்பவரது வீட்டுக்கு அருகில் போட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனியை சேர்ந்த அருண்பாண்டியன், சி.எம்.சி. காலனியை சேர்ந்த சுதாகர், குப்பங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி திம்மராவுத்தன்குப்பம் ரமணன், வண்டிப்பாளையம் முத்தையாநகர் ரோடு ராஜசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மற்ற குற்றவாளிகளை பிடிப்பதற்காக கிருஷ்ணனை மட்டும் போலீசார் அழைத்துச்சென்றனர்.
 
புதுப்பேட்டை அடுத்த குடுமியான்குப்பம் மலட்டாறு பாலத்தின் கீழ் சென்றபோது கிருஷ்ணன், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தீபனை குத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் தீபன், துப்பாக்கியை எடுத்து என்கவுண்ட்டரில் கிருஷ்ணனை சுட்டுக்கொன்றார்.

மேலும் வீரா கொலை வழக்கு தொடர்பாக கடலூர் குப்பங்குளம் சி.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சாமிநாதன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த சாமிநாதன் (30) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவன் மகன் ஸ்டீபன்ராஜ் (26), முருகன் மகன் ஜீவா (20) ஆகிய 3 பேரும் நேற்று விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவின்பேரில், அவர்கள் 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்