கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வதை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வதை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
காட்பாடி
தமிழ்நாடு தகுதி பெற்ற கல்லூரி ஆசிரியர்களின் கூட்டமைப்பின் சார்பில் காட்பாடி கழிஞ்சூரில் உள்ள மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் கார்த்தி தலைமை தாங்கினார். இதில் திரளான கல்லூரி ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு தகுதி பெற்ற கல்லூரி ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானிய குழு விதித்துள்ள முழு தகுதிகளையும் பெற்று உதவி பேராசிரியர்களாக மாநிலம் முழுவதும் தனியார் கல்லூரிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு அறிவிப்பின் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
ஆனால் உயர் கல்வித்துறை அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்களை பணி வரன் முறைபடுத்துகிறோம் என்று தற்போது சான்றிதழ்களை சரிபார்க்கின்றனர். இதனை உடனடியாக தடை செய்து நிறுத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் 48 ஆயிரம் பேர் உதவி பேராசிரியர்களாக தனியார் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர்.அவர்களுக்கு பணி கிடைப்பது இதன் மூலம் தடுக்கப்படும். அனைவருக்கும் சம வாய்ப்பை அரசு வழங்க வேண்டும். எனவே கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
---