விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள்

பாகிஸ்தான் போரில் வென்ற 50-வது ஆண்டு விழாவையொட்டி சூலூரில் விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-02-19 17:04 GMT
கோவை

பாகிஸ்தான் போரில் வென்ற 50-வது ஆண்டு விழாவையொட்டி சூலூரில் விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

போரில் இந்தியா வெற்றி

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றது. அதன் 50 ஆண்டை கொண்டாடும் வகையில் கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் ஏராளமான போர் விமானங்கள் வானில் அணிவகுத்து பறந்து ஆச்சரியமூட்டும் சாகசங்களை நிகழ்த்தின.
இதில் முதலாவதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானம் பார்வையாளர்களை பரவசமூட்டும் வகையில் சாகசங்களை செய்து காட்டின. 

அதைத்தொடர்ந்து ஏ.என். 32 சரக்கு போர் விமானம், எம்.ஐ-17 வி 5 ஹெலிகாப்டர்கள் கலந்து கொண்டன. விமானப்படையின் சூரிய கிரன் பிரிவை சேர்ந்த வீரர்கள் போர் விமானங்களிலும், சராங் ஹெலிகாப்டர் பிரிவினரும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினார்கள்.

எந்திர துப்பாக்கிகள் கண்காட்சி

தீ விபத்து ஏற்பட்டால் ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரை ஊற்றி அணைப்பது, போரின்போது ஹெலிகாப்டரில் இருந்து வீரர்கள் கீழே குதித்து பதுங்கி சென்று எதிரிகளை தாக்குவது போன்ற பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினார்கள். இந்த பரபரப்பான காட்சிகளை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

மேலும் சூலூர் விமானப்படை தளத்தில் விமானப்படையினர் பயன் படுத்தும் எந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. அதை பார்த்தவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விமானப்படையினர் பதில் அளித்தனர்.

பரம்வீர்சக்ரா விருது

இது குறித்து சூலூர் விமானப்படையின் ஏர்கமோடர் சமீர் ஜே. பென்சி கூறியதாவது:-
கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் சூலூர் விமானப்படையின் 2 பிரிவினர் கலந்து கொண்டனர். அது எங்களுக்கு பெருமையாக உள்ளது. 

இந்திய விமானப்படையில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற ஒரே விமானப்படை வீரர் நிர்மல் ஜித் சிங் செக்ரான் என்பவர் சூலூர் விமானப்படையை சேர்ந்தவர் ஆவார். ஏ.என். 32 என்ற சரக்கு விமானம் 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்