பறவைகளை கணக்கெடுத்த கல்லூரி மாணவிகள்

திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை கல்லூரி மாணவிகள் கணக்கெடுத்தனர். அப்போது 15 ஆயிரம் பறவைகள் இருப்பதை கண்டறிந்தனர்.

Update: 2021-02-19 16:28 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை கல்லூரி மாணவிகள் கணக்கெடுத்தனர். அப்போது 15 ஆயிரம் பறவைகள் இருப்பதை கண்டறிந்தனர்.

பறவைகள் சரணாலயம்

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி, கொள்ளுக்குடிப்பட்டியில் 17 ஹெக்டர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. இங்கு பிரான்ஸ், சுவீடன், நார்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்துள்ளன.
இந்த பறவைகள் ஆகஸ்டு மாதம் முதல் மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. அதில் நத்தை, கொக்கி நாரை, வாத்து, புள்ளி அழகு வாத்து, கொக்கு, முக்குளிப்பான், நாமகோழி, நைட் ஹெரான், பாம்புதாரா, கூழைக்கடா, மார்களியன், கருநீலஅரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், உண்ணிகொக்கு உள்ளிட்ட பல வகையான பறவைகள் இங்கு உள்ளன.

கணக்கெடுப்பு பணி

இந்த பறவைகளின் கணக்கெடுப்பு சரணாலயத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கலை கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர்கள் கோபிநாத், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில், 2-ம் ஆண்டு விலங்கியல் துறையை சேர்ந்த 35 மாணவ, மாணவிகள், வனச்சரக அலுவலர் மதிவாணன், சரக பணியாளர்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு குழுவிற்கு 8 மாணவர்கள் வீதம் 4 குழுக்களாக பிரித்து கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 57 வகையான பறவைகள்  இருப்பது அடையாளம் காணப்பட்டது. சரணாலயத்தில் 15 ஆயிரம் பறவைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

15 ஆயிரம் பறவைகள்

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன் கூறியதாவது:-
இந்த வேட்டங்குடி பட்டி பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நத்தை கொத்தி, நாரை உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தங்களது இனத்தை பெருக்கி விட்டு மீண்டும் திரும்பி செல்லும். நடப்பாண்டில் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் இங்குள்ள கண்மாய்களில் தற்போது வரை தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. பொதுவாக ஆண்டுதோறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மட்டுமே வெளிநாட்டு பறவைகள் வந்து சென்றது. ஆனால் இந்தாண்டு அதிகளவு மழை காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளது இந்த கணக்கெடுப்பின்படி தெரிய வருகிறது. இதில் அதிகளவு அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.  
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்