ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலி கொலை; விஷம் குடித்து கள்ளக்காதலன் தற்கொலை
வத்தலக்குண்டு அருகே ஆசைக்கு இணங்க மறுத்த ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன், தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே ஆசைக்கு இணங்க மறுத்த ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன், தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 30). புகைப்பட கலைஞர். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று மனைவி உள்ளார்.
நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த பொன்ராஜ் மனைவி ரதிதேவி (38). இவர் நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்றபோது சுரேசுக்கும், ரதிதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இதற்கிடையே அவர்களது கள்ளக்காதல் விஷயம், சுரேசின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அவர் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் சுரேசும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். இருப்பினும் ரதிதேவியுடனான கள்ளக்காதலை அவர் விடவில்லை.
பெண் கொலை
இந்தநிலையில் நேற்று சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் ரதிதேவியை வத்தலக்குண்டு அருகே உள்ள வெறியப்பநாயக்கன்பட்டியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேரும் தனியாக பேசி கொண்டிருந்தனர்.
அப்போது சுரேஷ் தனது ஆசைக்கு இணங்குமாறு ரதிதேவியை வற்புறுத்தினார். ஆனால் அதற்கு ரதிதேவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அருகில் கிடந்த கல்லை எடுத்து ரதிதேவியின் தலையில் போட்டுவிட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டார்.
இதற்கிடையே கல்லால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த ரதிதேவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள், இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார், ரதிதேவியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரதிதேவி இறந்துபோனார்.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சுரேசை வலைவீசி தேடினர்.
கள்ளக்காதலன் தற்கொலை
இதற்கிடையே கள்ளக்காதலியை கொன்றதால் எப்படியும் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய சுரேஷ், குரும்பபட்டி கண்மாய் பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர், சுரேசை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் இறந்துபோனார்.
ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலியை கொன்றுவிட்டு, கள்ளக்காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.