வனத்துறை சார்பில் மாவட்ட பறவைகள் புத்தகம் வெளியீடு

வனத்துறை சார்பில் மாவட்ட பறவைகள் புத்தகம் வெளியிடப்பட்டது

Update: 2021-02-19 15:39 GMT
ராமநாதபுரம்,
 ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கையாகவே உள்ள பறவைகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வனத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பறவைகள் என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பள்ளி ஆசிரியர் செல்வகணேஷ் என்பவரின் துணையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பருவகாலங்களில் வந்து சென்ற 160 பறவைகள் குறித்த அனைத்து விவரங்களும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பறவைகளின் பெயர், அதன் படங்கள், உருவ அளவு, வாழ்வியல் முறைகள், வந்து செல்லும் கால நிலை, உள்நாட்டு வெளிநாட்டு பறவையா என்பது போன்ற அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர அந்த புத்தக பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கியூ.ஆர்.கோடினை ஸ்கேன் செய்தால் அந்த பறவைகளின் ரீங்கார சத்தம் கேட்பதுடன் இ-பேர்ட் என்ற பறவைகள் குறித்து இணைய பக்கத்திற்கு அழைத்து சென்று அனைத்து கூடுதல் விவரங்களையும் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதுதவிர, இந்த புத்தகங்களின் பிரதி வேண்டுவோருக்காக இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டுஉள்ளது. புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் உள்நுழைந்து தரவிறக்கம் செய்து மாவட்ட மக்கள், பறவைகள் ஆர்வலர்கள், மாணவ-மாணவிகள் படித்துதெரிந்து கொள்ளலாம். இந்த புத்தகத்தினை மாவட்ட வன அலுவலகத்தில் வன உயிரின காப்பாளர் மாரிமுத்து வெளியிட வேட்டைதடுப்பு காவலர்கள் பெற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் அருண்குமார், உதவி வன காப்பாளர் கணேசலிங்கம், வனச்சரகர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பறவைஇயலாளர்கள் சந்திரசேகரன், ரவீந்திரன், பைஜு, கண்ணன், அபிசேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்