பரிசு பொருட்களை வாங்காமல் நல்ல வேட்பாளரை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும்- கலெக்டர் பேச்சு
தேர்தலில் வாக்களிக்க பரிசு பொருட்களை வாங்காமல் நல்ல வேட்பாளரை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
திருவண்ணாமலை
தேர்தலில் வாக்களிக்க பரிசு பொருட்களை வாங்காமல் நல்ல வேட்பாளரை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் மகளிர் திட்டம் சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் குழுவினர் பங்கேற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வாக்குரிமை உள்ள அனைவரும் சட்டமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களித்து தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்து வாக்களிக்க வேண்டும்.
பரிசு பொருட்களை...
இந்த முறை திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட சாதுக்கள் முதல் முறையாக வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தலில் வாக்களிக்க யாரிடமும் பரிசு பொருட்களை வாங்காமல் நல்ல வேட்பாளரை தேர்வு செய்து அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
மக்கள் அச்சமின்றி தயக்கமின்றி தங்கள் ஜனநாயக கடமையை மறவாமல் வாக்களிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினாா்.
மாணவர்களின் விழிப்புணர்வு பாடல்
அதைத் தெர்டர்ந்து கலெக்டர் தலைமையில், மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பாடல் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதில் சாதுக்கள், மகளிர் குழுவினர் உள்பட பலர் கையெழுத்திட்டனர்.