ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு; பெண்கள் சாலைமறியல்
ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மதுக்கடை திறக்க எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் சொன்னானூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பெண்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஊத்தங்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன், பயிற்சி துணை சூப்பிரண்டு ஹரி சங்கரி, கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கண்ணீர் மல்க...
மறியலில் ஈடுபட்ட பெண்கள் கண்ணீர் மல்க போலீசாரிடம் முறையிட்டனர். அவர்கள் கூறும் போது, ‘எங்கள் பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குன்னத்தூர் செல்வார்கள். தற்போது அந்த சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளதால் குன்னத்தூர் சென்று வர இயலாத சூழல் ஏற்படும். எனவே அரசு மதுக்கடையை இங்கு திறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றார்கள்.
இதையடுத்து மதுக்கடை தற்காலிகமாக மூடப்படுவதாகவும், அதிகாரிகளுடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் உறுதி அளித்தார். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.