நீலாங்கரை அருகே பட்டப்பகலில் பயங்கரம் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

நீலாங்கரை அருகே பட்டப்பகலில் புதுச்சேரியை சேர்ந்த ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2021-02-19 04:43 GMT
ஆலந்தூர், 

புதுச்சேரி மாநிலம் லால்பேட்டையை சேர்ந்தவர் ஜெரோம் என்ற பிரபு (வயது 36). ரவுடியான இவர், சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி புதுகணேஷ் நகர் 5-வது தெருவில் வசித்து வந்தார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெரோமை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெரோம் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சாலையிலேயே ஜெரோமை சரமாரியாக வெட்டியது.

இதில் முகம் முழுவதும் பலத்த வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ரவுடி ஜெரோம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உயிருக்கு ஆபத்து

இது பற்றி தகவல் அறிந்துவந்த நீலாங்கரை போலீசார் கொலையான ஜெரோம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி முத்தியால்பேட்டையில் அன்பு ரஜினி என்பவரை ஒரு கும்பல் ஜெரோம் உதவியுடன் குண்டு வீசி கொலை செய்தது. இந்த வழக்கில் ஸ்ரீராம், ஜெரோம் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த ஜெரோம் புதுச்சேரியில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்பதால் தனது குடும்பத்தை மட்டும் வெட்டுவாங்கேணியில் உள்ள இந்த வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

3 தனிப்படைகள்

கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுச்சேரி சென்ற அவர், தனது மகள் பெரிய மனுஷியானதால் வெட்டுவாங்கேணியில் உள்ள மகளை பார்க்க மீண்டும் இங்கு வந்ததாக கூறப்படுகிறது.

புதுச்சேரி வந்திருந்த ஜெரோமை அன்பு ரஜினியின் கோஷ்டியினர் பார்த்துவிட்டனர். பின்னர் அவரை பின் தொடர்ந்து வந்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

கொலையாளிகளை பிடிக்க அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் தலைமையில் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் விஷ்வேஸ்வரய்யா, இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளியை பிடிக்க புதுச்சேரிக்கு ஒரு தனிப்படை விரைந்து உள்ளது.

மேலும் செய்திகள்