முதல் முறையாக நோயாளியின் ரத்தம் வீணாகாமல் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை

நோயாளியின் ரத்தம் வீணாகாமல் முதல் முறையாக இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2021-02-19 02:23 GMT
சென்னை, 

சென்னை அம்பத்தூர் அருந்ததிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). கடந்த 2 வருடங்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் ‘ருமாட்டிக்’ காய்ச்சலினால், இதய வால்வு சுருக்கம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் செயற்கை இதய வால்வு சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ‘பாம்பே ஓ’ என்ற அரிய வகை ரத்தம் என்பது தெரிய வந்தது. மிகவும் அரிதான ரத்தம் என்பதால் அவரது ரத்தத்தை பயன்படுத்தியே இதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதுகுறித்து இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் கூறியதாவது:-

ரத்தமும் வீணாகாமல்....

இந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள நன்கொடையாளர்கள் தேடிய போது சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 2 நபர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களிடம் நன்கொடையாக பெறப்பட்ட அரிய வகை ’பாம்பே’ ரத்தம் அவசரகால பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டு, அவருக்கு ரத்த போக்கு ஏற்படாமல் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது.

அதன்படி அறுவை சிகிச்சையில் வெளியேறும் ரத்தம் சேமிக்கப்பட்டு, ‘டயனமிக் செல் சேவர்’ என்ற எந்திரத்தில் சிவப்பணுக்களை பிரித்தெடுத்து மீண்டும் நோயாளிக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலமாக நன்கொடையாக பெறப்பட்ட ரத்தம் பயன்படுத்தப்படாமல், நோயாளியின் ரத்தமும் வீணாகாமல், அவருக்கு இதய வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுபோன்று, நோயாளியின் ரத்தத்தை பயன்படுத்தி, அவை வீணாகாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பது இதுவே முதன் முறை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்