கோயம்பேடு பஸ் நிலையத்தில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு

கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள ஒரு மின் விளக்கு கம்பத்தின் உச்சியில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் ஏறி அமர்ந்து கொண்டு கீழே குதிக்க போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

Update: 2021-02-19 02:19 GMT
பூந்தமல்லி, 

கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள ஒரு மின் விளக்கு கம்பத்தின் உச்சியில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் ஏறி அமர்ந்து கொண்டு கீழே குதிக்க போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பயணிகள், அவரை கீழே இறங்கி வரும்படி கூறினர். இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் மர்மநபரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனாலும் அவர் கேட்கவில்லை. பின்னர் எழும்பூரில் இருந்து ராட்சத தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஏணி மூலம் சென்று தற்கொலை மிரட்டல் விடுத்தவரை மீட்டனர்.

அதில் அவர் போதையில் இருப்பது தெரிந்தது. அவரை கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் செங்குன்றத்தைச் சேர்ந்த ஆபிரகாம் (வயது 43) என்பதும், தனது மனைவி இறந்து விட்டதால் ஏற்பட்ட மனவிரக்தியில் குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. 

மேலும் செய்திகள்