சேலத்தில் 2-வது நாளாக வருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சேலத்தில் 2-வது நாளாக வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
சேலம்,
வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். துணை தாசில்தார்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள தனி ஊதியத்தை வழங்க வேண்டும். கருணை அடிப்படை பணிநியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன் முறை செய்து ஆணையிட மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வைத்து வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெறிச்சோடி காணப்பட்டன
இது குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறும் போது, வேலைநிறுத்த போராட்டத்தால் சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணிகள் முடங்கி உள்ளன. சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.
முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஊழியர்கள் பணிக்கு வராததால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் நேற்று 2-வது நளாக வெறிச்சோடி காணப்பட்டது.