புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சாலை மறியல்; 16 பேர் கைது

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, திருச்சியில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-18 21:45 GMT

திருச்சி, 
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, திருச்சியில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர் போராட்டம்
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தனர். அதன்படி திருச்சியிலும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். 
இதற்காக, திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் இருந்து, ரெயில் மறியல் போராட்டத்துக்காக கோட்டை ெரயில் நிலையம் செல்ல விவசாயிகள் ஆயத்தமானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார், அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தினர்.
சாலைமறியல்
இதனால், விவசாயிகள் மதியம் 1 மணிக்கு திருச்சி-கரூர் பை-பாஸ் சாலைக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், ரெயில் நிலையம் செல்ல அவர்கள் அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி அளிக்காததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 16 விவசாயிகளை போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்