அமராவதி பகுதியில் நெல்நாற்றங்கால் அமைக்கும் பணி
அமராவதி பகுதியில் நெல்நாற்றங்கால் அமைக்கும் பணி
தளி:
அமராவதி பகுதியில் நெல் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.
தண்ணீர் திறப்பு
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை நீர் ஆதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அத்துடன் அமராவதி ஆற்றை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
அழுகியது
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை யொட்டி அணை அதன் முழுகொள்ளளவை நெருங்கியது. இதையடுத்து நெல் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். சீரான இடைவெளியில் வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது பெய்து வந்தது.
இதனால் நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக அமராவதி பாசன பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் நெற் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் அவை வயல்வெளியில் சாய்ந்து அழுகிவிட்டது.
நாற்றங்கால் அமைக்கும் பணி
இதன் காரணமாக விவசாயிகள் முதலீட்டு தொகையை திரும்பப் பெற முடியாமல் நஷ்டத்துக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 2-ம் போக நெல் சாகுபடிக்கு அமராவதி பகுதி விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தற்போது நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எந்திரத்தின் மூலம் நிலத்தை உழுது அதில் மாடுகள் பூட்டிய பரம்பைக் கொண்டு சமன் செய்து வருகின்றனர். இதனால் நெற்பயிர்களுக்கு சீரான அளவு தண்ணீர் செல்வதுடன் நல்ல முறையில் வளர்ந்து வரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.