கோவையில் நாளை மு.க.ஸ்டாலின் பிரசாரம்
கோவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி பொதுமக்களிடம் அவர் மனுக்களை பெறுகிறார்.
கோவை,
கோவை மாநகர கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கோவை கொடிசியா அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 4 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் குறைகளை கோரிக்கை மனுவாக மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கி தங்களது கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் கோரிக்கைகளை தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தருவேன் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் அங்கு கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். அவர்களுக்கு உதவி செய்வதற்காக 500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் கார் மூலம் காரமடை செல்கிறார்.
அங்கு நடக்கும் உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டாமுத்தூர்,மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசுகிறார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் கார் மூலம் கோவை வந்து இரவில் தங்குகிறார்.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலையில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடக்கும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அதற்கு பிறகு அவர் கார் மூலம் திருப்பூர் செல்கிறார். எனவே மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவையில் நடக்கும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை மாநகர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.