மாசி மண்டல உற்சவ விழா சுற்று கொடியேற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி மண்டல உற்சவ விழா சுற்று கொடியேற்றம் நேற்று நடந்தது. இதையொட்டி 10 நாட்கள் சித்திரை வீதிகளில் சாமி வலம் வருவார்.;

Update: 2021-02-18 20:33 GMT
மதுரை,பிப்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி மண்டல உற்சவ விழா சுற்று கொடியேற்றம் நேற்று நடந்தது. இதையொட்டி 10 நாட்கள் சித்திரை வீதிகளில் சாமி வலம் வருவார்.
மாசி திருவிழா சுற்று கொடியேற்றம் 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா தான் அதிக நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். கடந்த ஜனவரி மாதம் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. அன்றைய தினத்தில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர் சாமிகள் தினமும் சாமி சன்னதி 2-ம் பிரகாத்தில் வலம் வந்தனர்.
இந்த நிலையில் பெரிய சாமி வீதி உலா நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் 8 இடங்களில் சுற்று கொடியேற்றம் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடந்தது. இதையொட்டி சாமி சன்னதி கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் எழுந்தருளினார்கள். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சப்தாவர்ண சப்பரம் 
விழாவில் தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 
விழாவில் 24-ந் தேதி சட்டத்தேரில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சாமி கீழச்சித்திரை வீதி, மீனாட்சி கோவில் தெரு வழியாக தெற்காவணி மூலவீதி வழியாக தெற்கு, மேற்கு, வடக்கு சித்திரை வீதி வழியாக கோவிலை வந்தடைவர். 
26-ந் தேதி இரவு சப்தாவர்ண சப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வருவர்.
மாசிமகம்
27-ந்தேதி மாசி மகம் தினத்தன்று மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் கோவிலில் இருந்து கிளம்பி சித்திரை வீதி வழியாக, கீழமாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளிவீதி வழியாக சிம்மக்கல் வைகை ஆற்றின் தென்கரை திருமலைராயர் படித்துறை பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தளுவார்கள். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்