டீக்கடைக்காரருக்கு நகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை

டீக்கடைக்காரருக்கு நகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை

Update: 2021-02-18 20:33 GMT
மதுரை,பிப்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “போடிநாயக்கனூர் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடையை ஏலம் எடுத்து அதில் டீக்கடை நடத்தி வந்தேன். இதற்காக ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் முன்வைப்புத் தொகையாக நகராட்சிக்கு செலுத்தி உள்ளேன். மாதந்தோறும் வாடகையாக ரூ.10 ஆயிரமும், அதற்கு ஜி.எஸ்.டி. வரி ரூ.1,800 உள்பட மொத்தம் ரூ.11,800 செலுத்தி வந்தேன். இந்தநிலையில் என்னுடன் கடையில் இருந்த சகோதரர் முரளி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து தொழிலை முன்பு போல தொடர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக எனது கடையை மூடி விட்டேன். இதனால் வருமானம் இன்றி நானும் எனது குடும்பத்தினரும் கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்டோம். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் எனது டீக்கடையை திறந்தேன். திடீரென நகராட்சி சார்பில் கொரோனா காலத்தில் மூடப்பட்டு இருந்த நாட்களுக்கும் சேர்த்து வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். நகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது கடைக்கு வந்து வாடகையை செலுத்துமாறு தொந்தரவு செய்கின்றனர். எனவே கடந்த மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை கடை வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவும், எனக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் ஆஜராகி, சிறு தொழில் புரிபவர்கள் ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்துள்ளனர். அந்த வகையில் மனுதாரரின் நிலையை கருத்தில் கொண்டு வாடகை பாக்கி தொகையை செலுத்துவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினர். விசாரணை முடிவில், மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்