திருப்பூர் மாநகராட்சி பூங்காவை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பூர் மாநகராட்சி பூங்காவை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்;
திருப்பூர்:-
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூங்காக்கள் மூடல்
திருப்பூர் மாநகரம் தொழிலாளர்கள் அதிகமாக இருந்து வரும் பகுதியாகும். இங்கு பனியன் நிறுவன தொழிலாளர்கள் அதிகளவில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகும். இந்த விடுமுறை தினத்தில் திருப்பூர் பகுதிகளில் பொழுதுபோக்கு வசதிகள் இல்லாததால் பலர் பூங்காவிற்கு தான் செல்வார்கள்.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகர பகுதிகளில் உள்ள பூங்காக்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பலர் குடும்பத்துடன் வந்து செல்வார்கள். இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக பல மாதங்களாக பூங்காக்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டு கிடந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், பூங்காக்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
அதன்படி திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. மாநகராட்சி பணியாளர்கள் அங்கிருந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்தனர். இந்த பணிகளை மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பணியாளர்களுக்கு தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா விரைவில் திறக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் சில காரணங்களால் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. மீண்டும் புதுப்பொலிவுடன் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். வழக்கம் போல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.