களை கட்டும் குலதெய்வ வழிபாடு

வெம்பக்கோட்டை பகுதியில் மாசி திருவிழாவையொட்டி குல தெய்வ வழிபாடு களை கட்டியுள்ளது.;

Update: 2021-02-18 20:20 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை பகுதியில் மாசி திருவிழாவையொட்டி குல தெய்வ வழிபாடு களை கட்டியுள்ளது. 
குல தெய்வ கோவில்கள் 
தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக வெம்பக்கோட்டை மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதியில் குலதெய்வ கோவில்கள் ஏராளமாக உள்ளன. 
வெம்பக்கோட்டை கொத்தளத்த சுவாமி கோவில், அங்காள ஈஸ்வரி கோவில், அய்யனார், தாயில்பட்டி கழுவுடையம்மன், கன்னி மாரியம்மன், சவுடாம்பிகை அம்மன், கண்டியாரம்மன், விஜயகரிசல்குளத்தில் நிறைய பாண்டியன் வலைய பட்டியில் செந்தட்டி அய்யனார் கோவில் பந்துவார்பட்டி பெரியாண்டவர் கோவில், கண்மாய் பட்டியில் தலைக்குடை அய்யனார் கோவில், ஏழாயிரம் பண்ணையில் ஏமராஜா கோவில், கன்னி சேரியில் காட்டு பத்ரகாளியம்மன் கோவில், அழகு பார்வதி அம்மன் கோவில், சுடலை மாடன் சுவாமி கோவில், இருளப்பன் கோவில், உத்தண்ட மாடசாமி, ஐகோர்ட் மகாராஜா கோவில் என ஏராளமான கோவில்கள் உள்ளன.
சிலைகளை புதுப்பித்தல் 
இந்த கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு  சிலைகளை புதுப்பித்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
மாசி மகம், மாசி சிவராத்திரி, மாசி சிறப்பு பூஜையை முன்னிட்டு கோவில்களை பராமரிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொந்த கிராமங்களுக்கு தீபாவளி மற்றும் தைப்பொங்கல் போன்ற விடுமுறை தினங்களில் கூட உள்ளூர் வராவிட்டாலும் குலதெய்வ வழிபாட்டிற்கு தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்வது காலங்காலமாக இருந்து வருகிறது. 
அதிலும் குறிப்பாக பஸ் வசதி குறைந்த குக்கிராமங்களில் சாலை வசதி கூட இல்லாத கிராமத்தில் அமைந்திருக்கும் கோவில்கள் குடும்பத்துடன் தங்கி மாசி சிவராத்திரி உள்ளிட்ட வழிபாடுகளை தவறாமல் பல தலைமுறைகளாக கடைபிடித்து வருகின்றனர். இந்த குல தெய்வ வழிபாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி கலந்து கொள்வர். 
விளையாட்டு போட்டி 
குல தெய்வ வழிபாட்டிற்கு வருபவர்கள் மேலும் மகிழ்ச்சி அடையும் வகையில்  விழா கமிட்டி சார்பாக பெண்களுக்கு கோலப்போட்டி, சிறுவர்-சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. 
பூசாரி நாயக்கன்பட்டி, பூசாரிபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஜக்கம்மாள் கோவில் தேவராட்டம் நிகழ்ச்சி நள்ளிரவு விமரிசையாக நடைபெறுகிறது. இதனை காண சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் கண்டு களிப்பார்கள்.

மேலும் செய்திகள்