நெல்லை, தென்காசிக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
தேர்தல் பிரசாரத்துக்காக நெல்லை, தென்காசிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நெல்லை:
தேர்தல் பிரசாரத்துக்காக நெல்லை, தென்காசிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் செய்த அவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து களக்காடு, சேரன்மாதேவி ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்தார். பின்னர் தென்காசி மாவட்டத்திலும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதையொட்டி வழிநெடுகிலும் அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழிநெடுகிலும் கட்சிக்கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. பிரசாரம் நடைபெற்ற இடங்களில் வாழை மரங்கள், கரும்புகளும் கட்டப்பட்டு இருந்தன.
பூரண கும்ப மரியாதை
களக்காட்டில் முதல்-அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேரன்மாதேவியில் முதல்-அமைச்சருக்கு புத்தர் சிலை, வெள்ளி வீரவாள் ஆகியவற்றை அ.தி.மு.க. நிர்வாகிகள் பரிசளித்தனர். பாவூர்சத்திரம், தென்காசியிலும் பிரசாரம் செய்த முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்-அமைச்சரின் பிரசார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சர் பச்சைமால், நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.டி.சி. நகரில் வரவேற்பு
முன்னதாக தூத்துக்குடியில் இருந்து வள்ளியூருக்கு காரில் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை கே.டி.சி. நகர் ரவுண்டானா பகுதியில் அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.