நண்பர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இலங்கை அகதி

நண்பர் வீட்டில் இலங்கை அகதி தூக்கில் பிணமாக தொங்கினார்.

Update: 2021-02-18 20:01 GMT
இந்திரகுமார்
பெரம்பலூர்:

நண்பர் வீட்டில் தூங்கினர்
பெரம்பலூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் இந்திரகுமார்(வயது 31). இலங்கை அகதியான இவருக்கு திருமணமாகி கவுரீஸ்வரி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இந்திரகுமார் தனது நண்பர்களான வினோத் (31), மனோபாலன் (29) ஆகியோருடன் சேர்ந்து தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்.
பின்னர் வினோத்தின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால், வினோத்துடன் இந்திரகுமார், மனோபாலன் ஆகியோர் பெரம்பலூர் மதனகோபாலபுரம் குறுக்குத்தெருவில் உள்ள வினோத்தின் வீட்டிற்கு தூங்கச்சென்றனர். அங்கு இந்திரகுமார், மனோபாலன் ஆகியோர் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், வினோத் வெளியே உள்ள அறையிலும் தூங்கினர்.
தூக்கில் தொங்கினார்
நேற்று காலை மனோபாலன் எழுந்து வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வினோத் எழுந்து, இந்திரகுமாரை எழுப்ப சென்றார். அப்போது அறையில் இந்திரகுமார் சேலையால் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் இந்திரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்திரகுமார் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்