வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த மாதம் 27-ந்தேதியன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறாததால் அவர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. 2-வது நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் 99 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய 4 தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தாலுகா அலுவலகங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் அந்த அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாரதிவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் வருவாய்த்துறையில் உள்ள அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் அங்கு வந்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.