2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
10 அம்ச கோரிக்கைகள்
அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும். பதவி உயர்விற்கு இப்பயிற்சிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்திரவாதம் செய்து, உடன் தீர்வு காண வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட பாதிப்புகளை உடன் சரிசெய்திட வேண்டும். பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி நேற்று 2-வது நாளாக கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெறிச்சோடிய அலுவலகம்
தொடர்ந்து கரூர் தாலுகா அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில செயலாளரும், மாவட்ட தலைவருமான அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளர் ஜெயவேல் காந்தன், பொருளாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கரூர் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.