கோவிலில் காணாமல் போன அனுமன் சிலை மீட்பு; கிணற்றில் போட்டது யார்? போலீசார் விசாரணை
கோவிலில் காணாமல் போன அனுமன் சிலையை கிணற்றில் இருந்து போலீசார் மீட்டனர். அந்த சிலையை கிணற்றில் போட்டது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அனுமன் சிலை
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் இருந்த கல்லால் ஆன சுமார் ஒரு அடி உயரமுள்ள அனுமன் சிலையை காணவில்லை.
இது குறித்து இக்கோவில் நிர்வாகத்தின் செயல் அலுவலர் சரவணன், விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், அந்த சிலையை தேடும் பணியை மேற்கொண்டனர்.
கிணற்றில் கிடந்தது
நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில், அந்த சிலையை தேடும் முயற்சியை மேற்கொண்டனர். கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு உள்ளே இறங்கி தேடி பார்த்தபோது, அனுமன் சிலை சேற்றில் சிக்கிக்கிடந்தது, தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலையை, கிணற்றுக்குள் இருந்து சிலையை மீட்டு தூய்மைப்படுத்தி அபிஷேகம் செய்து, அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைத்தனர். மேலும் அந்த சிலையை கிணற்றுக்குள் போட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு காணாமல் போன அனுமன் சிலையை கண்டுபிடித்த, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.