குமரியில் வருவாய்த்துறை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

குமரி மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2021-02-18 19:44 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.
காலவரையற்ற  வேலை நிறுத்தம் 
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். அதாவது அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும்.
துணை தாசில்தார்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் ரூ.1300, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.9,300, இணையான ஆரம்ப ஊதியம் ரூ.36,900 மற்றும் அலுவலக உதவியாளர் பதிவுரு எழுத்தர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்க வேண்டும்.
மாவட்டங்களில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை உடனே நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
பணிகள் பாதிப்பு 
இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. குமரி மாவட்டத்தில் 350-க்கும் அதிகமான வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய 6 தாலுகா அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை பிரிவுகள் மூடப்பட்டு இருந்தன. மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதோடு வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கும் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் ரே‌‌ஷன் கார்டு பெயர் மாற்றம், திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்