குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
செல்லாண்டிபாளையம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கரூர்
சாலை மறியல்
கரூர் செல்லாண்டிபாளையம் அருகே உள்ள சாலைபுதூர் பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் சாக்கடை வடிகால் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருவதால் சாலைபுதூருக்கு பைப் லைன் மூலம் குடிநீர் எடுத்து செல்லும் பணி தடைசெய்யப்பட்டு உள்ளது.
இதனால் சாலைபுதூர் பகுதி மக்கள் கடந்த 6 மாதமாக குடிநீர் இன்றி தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் கேட்டு கரூர் செல்லாண்டிபாளையம் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் கரூர் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அதிகாரிகள் கூறுகையில், விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது வரை லாரிகள் மூலம் போதிய அளவு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.