கல்குவாரி விபத்தில் 2 கால்களை இழந்த சேலம் வாலிபர்
கல்குவாரி விபத்தில் 2 கால்களை இழந்த வாலிபர் இழப்பீடு பெற்றுத்தரும்படி, ஆம்புலன்சில் வந்து திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.;
திண்டுக்கல்:
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பொட்டியபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் சிவக்குமார் (வயது 28).
2 கால்களை இழந்த இவர் ஸ்டெச்சரில் படுத்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில், நான் கல்குவாரியில் பாறைகளுக்கு துளையிடும் வேலை செய்து வந்தேன்.
நானும், தாரமங்கலம் காவேரிவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் ஆந்திர மாநிலம் சித்தூரில் கல்குவாரியில் வேலை செய்தோம்.
அப்போது பாறை உருண்டு விழுந்ததில் ஆறுமுகம் தலை நசுங்கி இறந்தார். எனக்கு 2 கால்களும் நசுங்கின.
மேலும் கால்கள் அழுகிவிட்டதால் 2 கால்களும் அகற்றப்பட்டன.
இதையடுத்து நடத்திய பேச்சுவார்த்தையில் இறந்து போன ஆறுமுகத்தின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சமும், எனக்கு ரூ.4 லட்சமும் இழப்பீடாக தருவதாக கல்குவாரி ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.
மோசடி
இதற்கிடையே கல்குவாரி ஒப்பந்ததாரர்களை கடத்தியதாக எனக்கு ஆதரவாக இருந்த காளியப்பன் உள்பட 2 பேர் மீது, திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் கடலூரை சேர்ந்தவர் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் அழைத்ததால் நானும், காளியப்பனும் போலீஸ் நிலையம் சென்றோம்.
அங்கு போலீசார் விசாரணை நடத்திய போது ஒப்பந்ததாரர்கள் தங்களை யாரும் கடத்தவில்லை என்றும், பேசியபடி தொகையை தருவதாகவும் கூறினர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகத்தின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சத்துக்கான காசோலையும், எனக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்துக்கான காசோலையும் போலீசாரிடம் ஒப்பந்ததாரர் கொடுத்துள்ளார்.
அதில் எனது காசோலையை பெற்று வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டது.
எனவே, எனக்கு இழப்பீடு தொகையை பெற்று தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.